Tuesday, October 07, 2008

செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் - குணமாக்கும் ரோபோக்கள்

நம்முடைய பூமிப்பந்தைச் சுற்றி தற்பொழுது எத்தனை செயற்கைக்கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? இதன் எண்ணிக்கை 8000ஐத் தாண்டும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செயலிழந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே விடப்படும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.


இந்த செயற்கைக்கோள்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல நாடுகள் விண்ணில் நிறுத்தியவை. அதனால் இதன் கட்டமைப்புகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். இப்பொழுது, கனடாவிலுள்ள Queen's university ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, செயலிழந்த செயற்கைக்கோள்களை Autonomous Space Servicing Vehicle (ASSV) என்று கூறப்படும் ரோபோ தேடிக்கண்டுபிடித்து, அதைப் பிடித்து இழுத்து வந்து, இதற்காகவே விண்ணில் உருவாக்கப்படும் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு நிறுத்தும். அதன் பின்னர், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பழுது பார்க்கப் படுமாம்.

தற்பொழுது அவர்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். கேட்பதற்கு இந்த ஆராய்ச்சி நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளது. சரியாக ஒரு செயற்கைக்கோளை பிடித்து இழுத்து வருவது, செயற்கைக் கோள்களின் கட்டமைப்பின் படி அதை சரி செய்வது, இதெல்லாம் சாத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://rcvlab.ece.queensu.ca/~greensm/papers/TaatiIROS05.pdf

No comments: