Tuesday, November 03, 2009

மார்க்ஸ் சகோதரர்கள்!!!

அதிகமாக ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மார்க்ஸ் சகோதரர்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 1930களில் தரமான காமெடி படங்களைத் தந்த பெருமை இவர்களைச் சாறும். யூத மதத்தைச் சேர்ந்த மார்க்ஸ் குடும்பத்தினரில் ஐந்து சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து பல நகைச்சுவைத் திரைப்படங்களை கொடுத்தவர்கள். இவர்களது பெயர் Chico, Harpo, Groucho, Gummo மற்றும் Zeppo ஆகும். இவர்களில் Gummo மற்றும் Zeppo அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. அவர்கள் வேறு துறையை தேடிச் சென்றனர். ஆனால் Chico, Harpo மற்றும் Groucho பல படங்களில் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார்கள்.

இவர்கள் நடித்தது 27 படங்கள் தான். அதிலும், இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து நடித்தது 16 திரைப்படங்கள். அதில் 5 திரைப்படங்கள் American Film Institute (AFI) தயாரிக்கும் "முதல் 100 காமெடி திரைப்படங்கள்" பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவர்கள் நடித்த "Duck Soup" என்னும் திரைப்படத்தைப் பார்த்தேன். 1930களில் இவர்கள் காமெடி வசனத்தில் அசத்தியிருப்பார்கள். அதிலும் ஒரு சகோதரர் (Harpo) வசனமே பேச மாட்டார். Groucho நம்ம வடிவேலு போல மீசையை வரைந்திருப்பார். அத்திரைப்படத்தில் இருந்து ஒரு காமெடி காட்சியை கீழே காணலாம்.